குக் தீவுகளில் சிக்கியுள்ள இலங்கைப் பெண் ஒருவரை பாதுகாப்பாகவும், தன்னார்வ அடிப்படையிலும் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் நியூசிலாந்தின் தலையீட்டைக் கோரியுள்ளது.
இது தொடர்பாக, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நியூசிலாந்தின் குடிவரவு விவகாரங்களுக்குப் பொறுப்பான இணை அமைச்சர் கெமரன் ப்ரூவருக்கு உத்தியோகபூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
ருச்சிரா செவ்வந்தி ரணசிங்கவை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு வசதியாக, தனிப்பட்ட முறையில் தலையிடுமாறும், விசேட மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொள்ளுமாறும் குறித்த கடிதத்தில் கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரம் ஆரம்பமானது முதல் வெலிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“நியூசிலாந்தின் குடிவரவு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை முழுமையாக மதிக்கும் அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் அடிப்படையில், ஆக்கபூர்வமான இராஜதந்திர ஈடுபாட்டின் ஊடாக நடைமுறைச் சாத்தியமானதும் மனிதாபிமானமிக்கதுமான தீர்வொன்றை எட்ட முடியும் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நலன் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், குறித்த பெண்ணை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான இராஜதந்திர மற்றும் தூதரக வழிமுறைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










