இலங்கையின் உள்நாட்டுப் போர் காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதுடன், பல தசாப்தங்களாகத் தொடரும் தண்டனையின்மைக்கு முடிவுகட்ட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது மனிதாபிமான உதவிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிருதி சிங், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்களைத் தீர்ப்பதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நூறாயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவை இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் விருப்பமின்றிச் செயற்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையின் கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுவதாகவும் ஸ்மிருதி சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்படுகின்ற போதிலும் தண்டனையின்மை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செம்மணியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது சிறுவர்கள் உட்பட 583 இற்கும் மேற்பட்டோரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், இன்று உலகின் பல்வேறு மோதல் பகுதிகளில் காணப்படும் இத்தகைய சம்பவங்களுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லாமையும் தொடரும் தண்டனையின்மையும், ஏனைய நாடுகளில் சர்வதேச சட்டத்தை மீறும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் நீதி, உண்மை மற்றும் இழப்பீடு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பல தசாப்தங்களாக நிலவும் தோல்வியும், புதிய ஐ.நா. அறிக்கையும் சர்வதேச கண்காணிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் (OHCHR Sri Lanka Accountability Project) பணிகளைத் தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உலகளாவிய அதிகார வரம்பு (Universal Jurisdiction) உள்ளிட்ட சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு, இந்தத் திட்டத்தின் வளங்களைப் பயன்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகளிடமும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
‘I Died Many Times: Attacks on Humanitarian Assistance in Sri Lanka, 20 Years On’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கை, இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் நடவடிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்தும், மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினராலும் மனிதாபிமான உதவிகள் கட்டுப்படுத்தப்பட்டமை மற்றும் மறுக்கப்பட்டமை குறித்தும் ஆராய்கிறது.
2021ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் கீழ் வழங்கப்பட்ட பொறுப்புக்கூறல் ஆணையை நடைமுறைப்படுத்துவதற்காக OHCHR இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் நிறுவப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.










