எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் ஒரு வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை மாலை எம்பிலிப்பிட்டிய – நோனகம வீதியின் கிரலவெல்கட்டுவ பகுதியில், நோனகம நோக்கிப் பயணித்த லொறியொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் காயமடைந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது, சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை கலன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் ஐந்து மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று மாலை தம்புள்ளை – பகமூன வீதியின் நான்காவது மைல்கல் அருகே துவிச்சக்கரவண்டியொன்றுடன் கொங்கிறீட் கலவை ஏற்றிச் செல்லும் வாகனம் மோதியதில் 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தளம பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொரு விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஹோமாகம, மாகும்புற பகுதியில் ஹைலெவல் வீதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மூன்று விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை மற்றும் ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










