புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் கலை மற்றும் கலாசார கிராமமொன்றை அமைப்பதற்காக, கொழும்புக்கு அருகிலுள்ள 27 ஏக்கர் காணியொன்றைக் கொள்வனவு செய்வதற்கான கூட்டுக் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கிராமத்தில் திரைப்படத்துறை, கலை மற்றும் கலாசாரச் செயற்பாடுகளுக்கான நிறுவனங்கள், தியான நிலையங்கள் மற்றும் பௌத்த தத்துவக் கற்கை நிலையங்கள் உள்ளிட்டவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிலத்தடி தொல்லியல் எச்சங்களை அகழ்வுப் பணிகள் இன்றி ஆய்வு செய்வதற்காக, நில ஊடுருவும் ரேடார் (Ground Penetrating Radar – GPR) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பிலும் குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அறநெறிப் பாடசாலைகளுக்கான இறுதிப் பரீட்சையும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையும் ஒரே காலப்பகுதியில் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில், கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட பரீட்சை கால அட்டவணையொன்றைத் தயாரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குருநாகலில் சேதமடைந்துள்ள ராஜ்ய சபா மண்டபத்தின் (அரச சபை மண்டபம்) பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொல்லியல் தளத்தின் உரிமை மற்றும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூட்டாகக் கலந்துரையாடி, விரைவில் இறுதித் தீர்மானமொன்றை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரமழான் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாகக் கிடைக்கும் பேரீச்சம்பழங்களை நாடளாவிய ரீதியில் உள்ள 2,700 பள்ளிவாசல்களுக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இதற்காக முறையான ஆவணப்படுத்தல்களுடன் கூடிய விநியோகப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.










