வெளிநாடுகளில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு, பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்களுக்கு எதிராக நாட்டின் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுப்பதன் அவசியம் குறித்து மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கவனம் செலுத்தியுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில், மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் அதன் கீழ் நியமிக்கப்பட்ட உபகுழு ஆகியவற்றின் கூட்டுக் கலந்துரையாடல் கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரோஜா போல் ராஜ், வெளிநாடுகளில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்களின் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்கள், இலங்கையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பெரும்பாலும் அறிவிக்கப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், உரிய கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின்றி இவ்வாறான நபர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைந்துகொள்ளும் நிலை ஏற்படுவதுடன், அவர்கள் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதற்கான ஆபத்தும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இவ்வாறான வழக்குகளில் வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரித்து நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட இலங்கைப் பிரஜைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேச ஒருங்கிணைப்பு பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் அவர்களின் விபரங்களை பொலிஸ் குற்றப் பதிவுக் கட்டமைப்பில் உள்ளடக்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாளர்களைத் தெரிவுசெய்யும்போது அவர்களின் குற்றப் பின்னணி தொடர்பான விசாரணைகளை கட்டாயமாக்குதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில், சட்ட அங்கீகாரத்துடன் கூடிய இடர் அடிப்படையிலான கண்காணிப்பு பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது அல்லது புதிய சட்டங்களை இயற்றுவது குறித்தும் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
இக்கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.










