நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசலுக்கான விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் தமது தரப்பினரே ஏற்றுக் கொள்ளவுள்ளதாகவும் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளதார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய டீசல் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டீசல் விலை இதைவிட அதிகளவிலேயே அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எது எப்படி இருப்பினும், கடந்த அமைச்சரவை அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியத்திற்காகப் பல கோடிகளை ஒதுக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு உத்தியாகவே கையாளப்பட்டுள்ளது.
தற்போது பணவீக்கம் 8.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது இந்த 10 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டாலும், தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க நாங்கள் தயாராக இல்லை என்பதனை மிகத் தெளிவாகக் கூற விரும்புகின்றேன்.
தனியார் பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட மாட்டாது. நாங்கள் ஒரு குறிப்பிட்ட பொறிமுறைக்குள் இருக்கிறோம், எனவே கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம்.
இதற்கான நஷ்டத்தை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். இதனால் குறுகிய தூர சேவைகளுக்கு நாளொன்றுக்கு 250 ரூபாவும், நீண்ட தூர சேவைகளுக்கு 1000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுகிறது.
இருப்பினும், இந்த அரசாங்கம் செய்யும் வித்தை என்ன என்பதை நான் தெளிவாகக் கூற வேண்டும். சாதாரண மக்களும், எங்களைப்போன்ற வர்த்தகர்களும், அரச ஊழியர்களும் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்துதான் அரசாங்கம் மானியங்களை வழங்குகிறது.
எமது சொந்தப் பணத்தையே மீண்டும் கோடிக்கணக்கில் மானியமாக ஒதுக்குகிறார்கள். இது மிகவும் துயரமான நிலைமையாகும்.
இது எதிர்காலத்தில் எமது பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைவதற்கான ஒரு முன்னறிவிப்பாகவே நான் காண்கிறேன். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது.
டீசல் விலை 10 ரூபாவால் அதிகரித்ததால் எமக்கு எந்தத் தாக்கமும் இல்லை, அது பஸ் கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது.
அரசாங்கம் மானியங்களுக்காக இவ்வளவு நிதியை ஒதுக்குவதற்குப் பதிலாக, இந்த 10 ரூபாய் விலை அதிகரிப்பைச் செய்யாமல் இருந்திருக்கலாம்.
அப்படிச் செய்திருந்தால் எமக்கு இந்த நஷ்டம் ஏற்பட்டிருக்காது. வேறு போக்குவரத்துச் சேவைகள் இந்த 10 ரூபாய் அதிகரிப்பைக் காரணம் காட்டி கட்டணங்களை அதிகரிக்கலாம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களால் கட்டணத்தை அதிகரிக்க முடியாது. மானியம் வழங்குவதற்காக இவ்வளவு பாரிய பணத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிலையில், இந்த 10 ரூபாய் விலை அதிகரிப்பை செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.










