காலி – ஹபரடுவ கொக்கல பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பாடசாலை சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை ஏற்றிச் சென்ற பேருந்து ரயிலுடன் மோதியதில் குறைந்தது 10 சிறுவர்கள் படுகாயமடைந்ததாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவலின்படி சுமார் 14 மற்றும் 15 வயதுடைய காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக கரபிட்டிய மற்றும் உனவட்டுன மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொக்கலவில் உள்ள மார்ட்டின் விக்ரமசிங்க நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு கொட்டாவாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஒரு குழுவினரே இந்த விபத்தில் சிக்குண்டுள்ளதாக, பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில், குறித்த பேருந்தில் சுமார் 41 சிறுவர்கள் 14 பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் 6 பெற்றோர்கள் பயணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக 40 வயது பேருந்து ஓட்டுநர் மற்றும் 21 வயது நடத்துநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஹபரடுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










