பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கானை மனிதாபிமான அடிப்படையில் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரும் அவசரப் பிரேரணை இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை இந்தப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இம்ரான் கானை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்பதே குறித்த பிரேரணையின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
1992ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி வெற்றிகொள்ளத் தலைமை தாங்கிய இம்ரான் கான், 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.
இம்ரான் கானின் சிறைவாசம் மற்றும் சிறைக்குள் அவர் நடத்தப்படும் விதம் தொடர்பில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாகக் கவலை வெளியிட்டு வரும் பின்னணியில், இந்தப் பிரேரணை இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எனினும், இலங்கை நாடாளுமன்றத்தில் இந்தப் பிரேரணை தொடர்பில் ஏதேனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது பாகிஸ்தானுக்கு சட்டரீதியாகக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.











