தகுந்த விசாரணை நடத்தப்படாமலும், தனது தரப்பு நியாயங்களை முன்வைக்க ஆசிரியருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமலும் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் செல்லுபடியற்றது எனத் தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், தென் மாகாண ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தை இரத்துச் செய்த மாகாண உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2026ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, காலி ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்தில் பணியாற்றிய ஆசிரியர், 2016ஆம் ஆண்டு கபுஹென்பொல நந்திமித்திர மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ளது.
1992ஆம் ஆண்டு முதல் தென் மாகாணத்தில் பணியாற்றி வந்த குறித்த ஆசிரியர், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாடசாலை வளாகத்தில் சிறுவர் பணியாளர் ஒருவர் மதுபானம் அருந்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாடசாலைக்கு வெளியே நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்திலும் அவர் பங்கேற்றதுடன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தென் மாகாணக் கிளைச் செயலாளர் என்ற வகையில் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி கல்வி அதிகாரிகளால் அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியர், அந்த எச்சரிக்கையை மீளப்பெறுமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வேறொரு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் காலி மாகாண உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி ஆசிரியருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஒழுக்காற்று விசாரணை முறையாக முன்னெடுக்கப்படாமலும், குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க ஆசிரியருக்கு நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்படாமலும் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன், மாகாண சபைகள் சட்டத்தின் கீழ் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டமை தொடர்பான சட்டபூர்வத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது.
இதனையடுத்து, குறித்த தீர்ப்புக்கு எதிராக தென் மாகாண அதிகாரிகள் மேன்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மாகாண சபைகள் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ், தென் மாகாண ஆளுநர் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அதிகாரங்களைச் சட்டபூர்வமாக ஒப்படைத்திருந்ததாகத் தீர்மானித்தது.
எனினும், ஆசிரியருக்கு முறையான விசாரணையும் நியாயமான முறையில் தனது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் மற்றுமொரு தீர்மானத்தை எதிர்த்து அதிகாரிகள் மேன்முறையீடு செய்யவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
எனவே, அதிகாரங்களை ஒப்படைத்தமை சட்டபூர்வமானதாக இருந்தாலும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமை மற்றும் நியாயமான விசாரணைக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் ஆசிரியரின் இடமாற்றம் செல்லுபடியற்றதாகும் என நீதிமன்றம் தீர்மானித்தது.
இதற்கமைய, அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்மானத்தை மாத்திரம் மாற்றியமைத்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஆசிரியரின் இடமாற்றத்தை இரத்துச் செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை உறுதிப்படுத்தியது.
அத்துடன், வழக்குச் செலவாக 75,000 ரூபாவை வழங்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிலும் தலையிட நீதிமன்றம் மறுத்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதும், குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்குவதும் அவசியம் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.










