ஐக்கிய இராச்சிய (UK) அரசாங்கத்துடனான பரஸ்பர தற்காலிக ஏற்பாட்டின் கீழ் எஸ்வத்தினி (Eswatini) நாட்டில் வசித்து வந்த கிஷாந்த் பெரமையா (Kishanth Peramaiya) என்ற இலங்கைப் பிரஜை உயிரிழந்துள்ளதாக எஸ்வத்தினி அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எஸ்வத்தினி அரசாங்கத்தின் தற்காலிக ஊடகப் பேச்சாளர் தபிலே ம்ட்லுலி (Thabile Mdluli) மூலமாக, செப்டம்பர் 28 அன்று இந்த மரணம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
உயிரிழந்த நபர் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலுள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதி அந்தஸ்து கோரிய இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
சர்வதேசப் பாதுகாப்பின் கீழ், ஐக்கிய இராச்சிய அரசுடன் எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் அவர் தற்காலிகமாக எஸ்வத்தினியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
அவர் உயிரிழந்த காலப்பகுதியில், அவரை எஸ்வத்தினி இராச்சியத்திலேயே நீண்டகாலம் அல்லது நிரந்தரமாக தங்கவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரித்தானிய மற்றும் எஸ்வத்தினி அரசாங்கங்கள் ஆலோசனைகளை நடத்தி வந்தன.
மரணத்திற்கான துல்லியமான காரணம் அரசாங்க அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தற்போது, எஸ்வத்தினியிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் இணைந்து இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.











