ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏர்பஸ் விமானக் கொள்வனவுடன் தொடர்புடைய பணச்சலவை விசாரணையில், ஒக்டோபர் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் சந்தேகநபராக இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், இலஞ்சம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்துக்கு அறிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவை செப்டெம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றைய உத்தரவின் மூலம் அவரது விளக்கமறியல் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையாளர்கள் சமர்ப்பித்த தகவல்களின் அடிப்படையில், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின்பேரில் நாமல் ராஜபக்ஷ அண்மையில் இந்தப் பணச்சலவை வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்காக 2013ஆம் ஆண்டு ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகிறது.










