நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் இதுவரை எவ்வித கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை என அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (09) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது பல்வேறு தொழில்சார் குழுக்களிடமிருந்து ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாறிவரும் சனத்தொகை மற்றும் பொருளாதார நிலைமைகள் காரணமாகவே இக்கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நாட்டின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளமை மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட்-19 காலகட்டத்தில் பல தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவர்களின் அனுபவத்தை பொதுச் சேவையில் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையில் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் பல் வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 இலிருந்து 63 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.
இது போன்றே ஏனைய துறைகளிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது குறித்து அரசாங்கத்திற்குள் எந்தவொரு கலந்துரையாடலும் இதுவரை இடம்பெறவில்லை.
இது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.