அரசாங்கம் பல நிதி முறைகேடுகளை மறைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, சர்ச்சைக்குரிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்டவர் யார் என்பதை ஜனாதிபதி உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் பெறப்பட்ட போலியான மின்னஞ்சல் (Fraudulent email) அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த 2.5 மில்லியன் டொலர் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்த 2.5 மில்லியன் டொலர்களைப் பெற்றது யார்? அது ஒரு கணக்கிற்கு அனுப்பப்பட்டதா அல்லது பல கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், இது குறித்த வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை என வினவினார்.
இந்த சம்பவம் நடந்து பல மாதங்களாகியும் அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாறாக கீழ்நிலை அதிகாரிகள் மீது பழியைப் சுமத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நிலக்கரி இறக்குமதி: தரமற்ற நிலக்கரி விநியோகத்தால் ஏற்பட்ட நிதி இழப்புகள் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சில நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக மோசடி விசாரணைகள் புறக்கணிக்கப்படுவதாக அவர் சாடினார்.
உலகச் சந்தையில் நிலவும் விலையை விட இலங்கை அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்துள்ளதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.