ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று இரவு செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது, இரண்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
நகரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், “அங்கு கூடியிருந்தவர்கள் அவர்களின் தோலின் நிறத்தைக் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர்” என்று ஸ்காட்லாந்து காவல்துறை (Police Scotland) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உதவி தலைமைக்காவல் அதிகாரி (Assistant Chief Constable) ஆலன் வாடெல், “இந்தக் குற்றச் செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஸ்காட்லாந்தில் இனவெறிக்கும் வன்முறைக்கும் இடமில்லை என்ற தெளிவான செய்தியை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், சமூகத்தினருடன் கலந்துரையாடி அவர்களின் கவலைகளைக் கேட்டறிந்து வருவதாகவும் அவர் கூறினார்.
வன்முறைகள் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க, ஐக்கிய இராச்சியத்தின் (UK) பிற காவல்துறை பிரிவுகளுடன் இணைந்து முறையான பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் சிறப்புப் படைகள் களமிறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பரஸ்பர உதவி ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, வட அயர்லாந்து காவல்துறைக்கு (PSNI) ஸ்காட்லாந்து காவல்துறை அதிகாரிகள் ஆதரவளிப்பார்கள் என்றும் ஆலன் வாடெல் சுட்டிக்காட்டியுள்ளார்.