கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாகவும் வீடமைப்பு சம்பவம் தொடர்பிலும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருந்தோட்ட பகுதிகளில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் என்ற அடிப்படையில் அடியாட்களை வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் படியும் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய பிரதி அமைச்சர் குறிப்பிட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமை அதிகாரியை அமைச்சின் அலுவலகத்திற்கு வரவழைத்து உடனடியாக இந்த பாதுகாப்பு குழுவினர் தொடர்பாக நிருவாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கும் படி அறிவுறுத்தியதுடன் இவ்வாறு மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதை உடனடியாக நிறுத்தும் படியும் அறிவுறுத்தி இருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் காணியை வழங்குவது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் படியும் பிரதி அமைச்சர் மேலும் அறிவுறுத்திருந்தார்.
அத்தோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஐவரினது சம்பளத்தை மீள வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டு சகல கோரிக்கைகளுக்கும் கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிகாரியால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.