மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் மீது பாடலாசிரியரும், ஊடகவியலாளருமான வசக்திவேல் எழுதிய பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை களுமுந்தன்வெளி முத்துமாரியம்மன் முன்றில் இடம்பெற்றது.
களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் விநாயகர் கலைக்கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான மு.சவுந்தரராசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு, ஆன்மீக அதிதியாக களுமுந்தன்வெளி மாணிக்கப் பிள்ளையார் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் பிரதம குரு சிவ ஸ்ரீ த.கு.திருச்செல்வம் குருக்கள், பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகம் – சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கற்புல தொழில்நுட்பத்துறையின் தலைவர் கலாநிதி.சு.சிவரெத்தினம், சிறப்பு அதிதிகளாக களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தின் அதிபர் நா.ராமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
விநாயகர் கலைக்கழகத்தின் உபதலைவரும் ஆசிரியருமான ந. தரணிதரனின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பிற்கான தலைவர் த.வசந்தராஜா இறுவெட்டை வெளியீட்டு வைத்தார்.
இறுவெட்டின் முதற் பிரதியை மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஆலோசகருமான தேசபந்து எம்.செல்வராஜா பெற்றுக் கொண்டார்.
இறுவெட்டின் கவிஞர் நயவுரையினை தொடர்ந்து கவிஞர் ம.ஜீவரெட்ணம் ஆசிரியர் நிகழ்த்தியதுடன், ஏற்புரையை பாடலாசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வ.சக்திவேல், நன்றியுரையை விநாயகர் கலைக்கழகத்தின் செயலாளர் யோ.கிவேதன் ஆகியோர் நிகழ்த்தினர்.
குறித்த இறுவெட்டிற்கு கிழக்கிலங்கையின் புகழ்பூத்த இசையமைப்பாளர் நிஸ்கமானந்தராஜா டனூஷ்ஷியன் இசையமைத்துள்ளதுடன், இலங்கை வானொலி தேசிய கலைஞரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலைச்சுடர் வீ.பத்மசிறி மற்றும் புகழ்பூத்த பாடகி செல்வி சுலக்ஷனி புவனேந்திரராசா ஆகியோர் இணைந்து பாமாலையினை பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



