விமான எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதியமைச்சின் நிதி அறிக்கையின்படி, 2026-2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய நட்டம் 35.6 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 82.8 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ள போதிலும், முகாமைத்துவச் செலவுகள், விமான எரிபொருள் மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள் அதிகரித்தமை, அத்துடன் அந்நியச் செலாவணி இழப்புகள் காரணமாக இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் 3.4 பில்லியன் ரூபாய் நிகர இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குழுமத்தின் மொத்த நிகர நட்டம் 32.2 பில்லியன் ரூபாயாகக் குறைந்துள்ளது.
மேலும், 2026 ஜூன் மாத நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 209.9 பில்லியன் ரூபாயாக இருந்துள்ள நிலையில், மொத்தப் பொறுப்புகள் 561.4 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளன. இதனால் நிறுவனத்தின் மூலதன நிலைமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் மிஸ்ரா, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் விளைவாக விமான எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.










