மட்டக்களப்பில் உறவினர் ஒருவர் பெண்ணொருவர் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தில், பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஆரையம்பதி, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4 மணியளவில், குறித்த பெண் தனது வீட்டிற்கு வெளியே கதிரையொன்றில் அமர்ந்திருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, பின்னால் வந்த உறவினர் ஒருவர் குறித்த பெண் மீது பெற்றோலை ஊற்றி தீ மூட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண்ணை அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து தப்பிச் சென்ற சந்தேகநபரை, மறுநாளான புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் உயிரிழந்த பெண்ணின் மைத்துனியின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீக்காய சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி கடந்த நேற்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.










