இலங்கை கடற்படையிலிருந்து ஓய்வுபெறும் உத்தியோகத்தர்களுக்கு கப்பல் மற்றும் கடல்சார் துறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் கொழும்பிலுள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடிதுவாக்கு ஆகியோர் தலைமையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஓய்வுபெறும் கடற்படை வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை தகைமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான முறையான பொறிமுறையை உருவாக்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
உலகளாவிய கடல்சார் துறையில் நுழைவதற்குத் தேவையான சான்றிதழ் தேவைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடல்சார் ஒழுங்குமுறை அதிகார சபைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சர்வதேச கடல்சார் தரத்திற்கு ஏற்ப, தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான நிலையான கட்டமைப்பை விரைவுபடுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கடற்படைத் தளபதி, வர்த்தகக் கப்பல் பணிப்பாளர் நாயகம், மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) மற்றும் பாதுகாப்பு அமைச்சு, கடற்படை மற்றும் வர்த்தகக் கப்பல் செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.