அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எவ்வித உயர்வும் மேற்கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள பேருந்து கட்டண நிர்ணய சூத்திரத்திற்கு அமையவே கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அண்மைய எரிபொருள் விலை அதிகரிப்பானது கட்டணத் திருத்தத்திற்குத் தேவையான எல்லைப் பெறுமதியை எட்டவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பிரதி அமைச்சரின் விளக்கமளிப்பின்படி, எரிபொருள் விலையானது 4 வீதத்திற்கும் அதிகமான உத்தியோகபூர்வ மாற்றத்தைக் கண்டால் மட்டுமே பேருந்து கட்டணத் திருத்தம் குறித்து பரிசீலிக்க முடியும்.
எனினும், இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பானது அந்த 4 வீத எல்லைப் பெறுமதியைத் தாண்டவில்லை என்பதால், தற்போதைய கட்டத்தில் பேருந்து கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை என அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வார எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என பொதுமக்கள் மத்தியில் எழுந்த கவலைகளுக்கு மத்தியில் பிரதி அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.