முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும் முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ச, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பும் போது விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் எனக் கூறி, கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ச இன்று திங்கட்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதுடன், தாம் கைது செய்யப்பட்டால் எந்தவொரு நிபந்தனையின் கீழும் பிணை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பிரதிவாதியாகவும், ஷிராந்தி ராஜபக்ச மனுதாரராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு ஷிராந்தி ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள ஷிராந்தி ராஜபக்ச, மருத்துவ சிகிச்சைக்காக அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக செப்டெம்பர் 15ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மறுநாள் அதிகாலை செப்டெம்பர் 16ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார்.
அவர் இலங்கையை விட்டு வெளியேறிய போது, செப்டெம்பர் 24ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தரப்பில், ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையிலும் ஷிராந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை கிடைத்திருந்த நிலையிலேயே நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான தகவல்களை ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பின்னர் மறுத்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து நாட்டை விட்டு வெளியேறத் தயாராகும் வரையிலும் அவருக்கு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை எதுவும் கிடைக்கவில்லை என்றும், விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அந்த அழைப்பாணை கிடைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.










