உள்ளே அரிசி இருப்பதாக குறிப்பிட்டு, ஏற்றுமதிக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த கொள்கலனில், இரும்பு உள்ளிட்ட பல்வேறு உலோகக் கழிவுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை இலங்கை சுங்கத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை துறைமுக நுழைவுப் பாதைக்கு அருகில், இங்குருகடை சந்தியிலுள்ள ஏற்றுமதி நிறுவனமொன்றில், இலங்கை சுங்கத் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்கலன் அரிசி அடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு ஏற்றுமதிக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்தது. எனினும், அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்னர் அந்தக் கொள்கலன் தடுத்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்து, சந்தேகத்திற்கிடமான கொள்கலனை சோதனையிட அனுமதி கோரியுள்ளனர்.
இதன்போது, பொலிஸ் அதிகாரிகளின் பங்கேற்புடன் கொள்கலனை சோதனையிடுமாறு நீதிமன்றம் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.
அதன்படி, சுங்க அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து இன்று கொள்கலனை சோதனையிட்டபோது, அதில் அறிவிக்கப்பட்டிருந்தபடி அரிசி எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
மாறாக, கொள்கலனுக்குள் இரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உலோகக் கழிவுகள் ஏற்றப்பட்டிருந்தமை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த கொள்கலன் திட்டமிட்டபடி ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டதாக சுங்கத் திணைக்கள பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.










