குடிநீர் போத்தல் ஒன்றை, சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், நிறுவனம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் 120 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அது 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட விலையை விட 80 ரூபாய்க்கு அதிகமாகவும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட சுமார் 67 சதவீதம் அதிகமாகவும் குறித்த குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்த நிலையில், நீதிமன்றத்தினால் 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை நினைவூட்டியுள்ளது.
நுகர்வோர், விலை மீறல்கள் தொடர்பில் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.










