முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து சமர்ப்பணங்களை முன்வைக்க, எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கோட்டாபய ராஜபக்ஷவை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்கும் வகையில், பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதிக்கு, தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் திறந்த நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார். எனினும், இந்த வழக்கில் முறைப்பாட்டாளராக உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து, பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து தமது நிலைப்பாட்டை முன்வைப்பதற்காக நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் சிலருக்கு இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.










