வாரிசு – துணிவு எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்

விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளன. இந்நிலையில் எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து நடிகரும், விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

அஜித்தில் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளன. 8 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகுவதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாரிசு படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்குகிறார்.

ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச்.வினோத், அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் 3 ஆவது படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. துணிவு படத்திலிருந்து 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் எந்த படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது-

சில முறை அஜித் சார், விஜய் சார் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகியுள்ளன. துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள், ஸ்க்ரீன்கள் தான் ஒதுக்கப்படும். துணிவு படத்தின் தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான வர்த்தகம் 4 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.