இலங்கையின் தென்பகுதி ஆழ்கடலில் இடைமறிக்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகிலிருந்து, 4.2 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சந்தைப் பெறுமதியுடைய 189 கிலோகிராமிற்கும் மேற்பட்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, 132 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 57 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கமாண்டர் சமிந்த வலகுளுகே தெரிவித்துள்ளார்.
குறித்த மீன்பிடிப் படகிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் இன்று வியாழக்கிழமை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அவற்றைப் பரிசோதித்து எடைபோட்ட பின்னர் இறுதித் தொகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
‘பானா புத்த’ (Phana Putha) எனப் பதிவுசெய்யப்பட்ட குறித்த மீன்பிடிப் படகு, கடந்த நவம்பர் 1ஆம் திகதி அதிகாலை இலங்கையின் தென்பகுதி ஆழ்கடலில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட உளவுத் தகவல் அடிப்படையிலான நடவடிக்கையின்போது இடைமறிக்கப்பட்டது.
கமாண்டர் சமிந்த வலகுளுகே தெரிவித்த தகவலின்படி, குறித்த படகு கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி கந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகக் கடலுக்குச் சென்றுள்ளது.
கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில், கடற்படையினர் தமது நவீன ரகக் கப்பலான ‘சமுத்திர விஜய’வைப் பயன்படுத்தி குறித்த படகை இடைமறித்துள்ளனர்.
இதன்போது படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய 10 மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், படகிலிருந்த ஐந்து சந்தேகநபர்களும் செயற்கைக்கோள் தொலைபேசி ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, படகும் சந்தேகநபர்களும் இன்று திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், போதைப்பொருட்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்துகொண்டனர்.
இதன்போது, ஐஸ் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 100 பொதிகளும் ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் 52 பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை, அரச புலனாய்வுப் பிரிவுகள், சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புடன் தொடர்புடைய அமைப்புகள் வழங்கிய உளவுத் தகவல்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டதாகக் கமாண்டர் சமிந்த வலகுளுகே மேலும் தெரிவித்துள்ளார்.










