டிக்டொக் சமூக வழிகாட்டுதல்களை மீறியமைக்காக, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையிலிருந்து பதிவேற்றப்பட்ட 871,446 காணொளிகளை டிக்டொக் நிறுவனம் நீக்கியுள்ளதாக அதன் அண்மைய வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 441,089 காணொளிகளும், இரண்டாவது காலாண்டில் 430,357 காணொளிகளும் நீக்கப்பட்டுள்ளன.
முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இரண்டாவது காலாண்டில் நீக்கப்பட்ட காணொளிகளின் எண்ணிக்கை 10,732ஆல் குறைந்துள்ளதுடன், இது சுமார் 2.4 சதவீத வீழ்ச்சியாகும்.
எந்த வகையான காணொளிகள் நீக்கப்பட்டன?
டிக்டொக் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு அறிக்கையின்படி, உலகளாவிய ரீதியில் நீக்கப்பட்ட காணொளிகளில் அதிகமானவை உணர்வுபூர்வமான அல்லது முதிர்ச்சியடைந்த உள்ளடக்கங்கள், மனநலம் மற்றும் நடத்தை சார்ந்த உள்ளடக்கங்கள், பாலியல் தன்மையை வெளிப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பானவையாகும்.
உலகளாவிய ரீதியில் நீக்கப்பட்ட காணொளிகளின் வகைப்பாடு பின்வருமாறு அமைந்துள்ளது.
- 19.5 சதவீதம் – உணர்வுபூர்வமான அல்லது முதிர்ச்சியடைந்த உள்ளடக்கங்கள்.
- 16.1 சதவீதம் – மனநலம் மற்றும் நடத்தை சார்ந்த உள்ளடக்கங்கள்.
- 13.8 சதவீதம் – உடல் வெளிப்பாடு மற்றும் பாலியல் தன்மையை வெளிப்படுத்தும் செயற்பாடுகள்.
- 13.7 சதவீதம் – பாதுகாப்பு மற்றும் நாகரிகத் தரநிலைகளை மீறும் உள்ளடக்கங்கள்.
- 13.5 சதவீதம் – ஆபத்தான செயற்பாடுகள் மற்றும் சவால்கள்.
- 1.8 சதவீதம் – தளத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் திருத்தப்பட்ட மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள்.
எனினும், இலங்கையிலிருந்து நீக்கப்பட்ட காணொளிகளின் வகைகள் குறித்த தனிப்பட்ட விபரங்களை டிக்டொக் வெளியிடவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சதவீதங்கள் உலகளாவிய தரவுகளையே பிரதிபலிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அனுமதிக்கப்பட்ட 33,000 இற்கும் அதிகமான காணொளிகள்
முதல் காலாண்டில் இலங்கையிலிருந்து நீக்கப்பட்ட 20,051 காணொளிகளும், இரண்டாவது காலாண்டில் நீக்கப்பட்ட 12,960 காணொளிகளும் பின்னர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டிக்டொக் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆறு மாதங்களில் மொத்தமாக 33,011 காணொளிகள் மீண்டும் தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது காலாண்டில் இலங்கையில் நீக்கப்பட்ட காணொளிகளில் 99.4 சதவீதமானவை பயனர்களால் முறைப்பாடு செய்யப்படுவதற்கு முன்னரே அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல் காலாண்டில் இந்த வீதம் 99.1 சதவீதமாகக் காணப்பட்டது.
எனினும், பயனர்களின் முறைப்பாடுகளுக்கு முன்னரே அடையாளம் காணப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் நீக்கப்பட்ட காணொளிகளின் வீதம் முதல் காலாண்டில் 95 சதவீதமாக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 93.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இலங்கையில் பதிவேற்றப்பட்ட மொத்த காணொளிகளில் நீக்கப்பட்டவற்றின் வீதம் இரண்டு காலாண்டுகளிலும் 0.5 சதவீதமாகவே காணப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் 18.8 கோடி காணொளிகள் நீக்கம்
உலகளாவிய ரீதியில் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுமார் 188.3 மில்லியன் காணொளிகளை டிக்டொக் நீக்கியுள்ளது.
இவற்றில் 97.4 சதவீதமானவை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தானியங்கி கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் மூலம் நீக்கப்பட்டுள்ளன.
அதே காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் 278.4 மில்லியன் கருத்துப் பதிவுகள், 146.8 மில்லியன் போலிக் கணக்குகள் மற்றும் 13 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்பட்ட 26.8 மில்லியன் கணக்குகளையும் நிறுவனம் நீக்கியுள்ளது.
தீங்கு விளைவிக்கக்கூடிய மற்றும் தளத்தின் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களை விரைவாக அடையாளம் கண்டு, தளத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தமது தானியங்கி கண்காணிப்பு முறைமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.











