வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள், குறிப்பாக எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குறித்த பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றதுடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையின் மத்தியில் குறித்த பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சஜித் பிரேமதாச தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மக்களின் கொள்வனவுத் திறன் வீழ்ச்சி மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் உள்ள உழைக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அத்தியாவசிய சுகாதார, கல்விச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தரமான சுகாதாரச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்கள், பாடசாலைக் கல்வியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர்களின் போஷாக்கு நிலைமை தொடர்பான விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான தாஹிர் மரிக்கார், துரைராசா ரவிகரன், ஜி.ஜி. பொன்னம்பலம், ஜி. சிறிநேசன், எம்.எஸ். உத்துமா லெப்பை, கே. காதர் மஸ்தான், பி. சத்தியலிங்கம் மற்றும் ஹபீப் ரிபான் ஆகியோர் கலந்துகொண்டனர்.










