மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், 2027ஆம் ஆண்டில் மேலும் 50 பேருந்துகளை சேவையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேல் மாகாணத்திற்கு அப்பால் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இரண்டு வழித்தடங்களில் 10 பேருந்துகளுடன் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பஸ் சேவை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், ஏழு வழித்தடங்களில் 122 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
LMT Go கையடக்கத் தொலைபேசி செயலியை மேம்படுத்துதல் மற்றும் பயணிகளுக்கான சேவையின் தரத்தை உயர்த்துதல் தொடர்பாக பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விரிவாக்கத் திட்டங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.










