பதவி விலகும் பிலிப்பைன்ஸுக்கான இலங்கையின் தூதுவர் சானக தல்பஹேவவுக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர், அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘ஒடர் ஒஃப் சிகத்துனா’ (Order of Sikatuna) விருதை கிராண்ட் கிரொஸ் (Grand Cross) தரத்தில் வழங்கிக் கௌரவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2026 ஒக்டோபர் 28ஆம் திகதி மலக்கானாங் அரண்மனையில் ஜனாதிபதி மார்கோஸைச் சந்தித்து விடைபெறும் நிகழ்வின்போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
1953ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘ஒடர் ஒஃப் சிகத்துனா’ விருது, ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை அங்கீகரிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் தேசிய இராஜதந்திர விருதாகும்.
தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதில் தூதுவர் சானக தல்பஹேவ முக்கிய பங்காற்றியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரசியல் ஆலோசனைக் கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பித்தமை அவரது முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். இதன் மூலம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான முக்கிய தளம் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்தது.
மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் உத்தியோகபூர்வ பிலிப்பைன்ஸ் விஜயங்களும் அவரது பதவிக்காலத்தில் இடம்பெற்றதுடன், உயர்மட்ட இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வழிவகுத்தன.
பொருளாதாரத் துறையில், இலங்கை நிறுவனங்கள் பிலிப்பைன்ஸின் உற்பத்தித் துறையில் முதன்முறையாக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அவர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், சர்வதேச அங்கீகாரம் பெற்ற இரண்டு இலங்கை வர்த்தக நாமங்களை அந்நாட்டின் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் பங்களித்துள்ளார்.
அத்துடன், பிலிப்பைன்ஸ் பிரஜைகளைத் திருமணம் செய்து அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்காக ஐந்து ஆண்டுகால தற்காலிக வதிவிட விசா ஏற்பாட்டையும் அவர் பேச்சுவார்த்தை மூலம் பெற்றுக்கொடுத்துள்ளார். இது இலங்கைச் சமூகத்தினர் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த பிரச்சினைக்குத் தீர்வாக அமைந்துள்ளது.
மேலும், பிலிப்பைன்ஸில் இலங்கையின் முதலாவது கௌரவத் துணைத் தூதரகத்தை நிறுவுதல், இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட புனித சின்னங்களின் முதலாவது கண்காட்சியை ஏற்பாடு செய்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது கூட்டு தபால் முத்திரைகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட பல்வேறு இராஜதந்திர முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
விருதை வழங்கியபோது, இலங்கையின் மிகுந்த தகுதியும் திறமையும் கொண்ட பிரதிநிதியாகத் தூதுவர் சானக தல்பஹேவ விளங்கியதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.










