திஸ்ஸமஹாராம-பபாவ உத்தகந்தார வனப்பகுதியில் உயிருடன் உள்ள வனவிலங்குகள் மற்றும் விலங்குகளின் உடற்பாகங்களைச் சட்டவிரோதமாகச் சேகரித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு ஜேர்மன் பிரஜைகளும், இலங்கை சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 2ஆம் திகதி இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் ஊர்வன மற்றும் பூச்சி இனங்களைச் சிலர் சேகரித்து வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வனஜீவராசிகள் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று மாறுவேடமிட்டு, இரவு வேளையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, இரு ஜேர்மன் பிரஜைகளையும் இலங்கை சுற்றுலா வழிகாட்டி ஒருவரையும் அடையாளம் கண்ட அதிகாரிகள், யால நம்பா முகாமிடும் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சோதனையிட்டுள்ளனர். எனினும், ஆரம்பகட்டச் சோதனையில் சட்டவிரோதப் பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி தனது அறை எனத் தவறான அறையொன்றைக் காட்டி அதிகாரிகளைத் திசைதிருப்ப முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது உண்மையான தங்குமிடத்தைச் சோதனையிட்ட அதிகாரிகள் பெருமளவிலான உயிருள்ள விலங்குகள் மற்றும் விலங்குகளின் உடற்பாகங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது மலைப்பாம்புகள், பல்வேறு ஊர்வன இனங்கள், அந்துப்பூச்சிகள், தும்பிகள், முள்ளம்பன்றியின் முட்கள், மான்களின் எலும்புகள், மாடுகளின் பற்கள் மற்றும் மயிலிறகுகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.
மேலும், பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், உயிரின மாதிரிகளைப் பாதுகாப்பதற்கான கொள்கலன்கள் மற்றும் பல்வேறு இரசாயனப் பொருட்கள் அடங்கிய போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நவம்பர் 3ஆம் திகதி திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, உயிருடன் மீட்கப்பட்ட விலங்குகளை தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகள் வனவிலங்குகள் மற்றும் அவற்றின் மாதிரிகளைச் சட்டவிரோதமாகச் சேகரித்த குற்றச்சாட்டில் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் உயிரியல் மற்றும் மரபணு வளங்கள் திருடப்படுவது தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உடவளவை தேசிய பூங்காவின் பனஹதுவ வனவிலங்கு பிராந்திய அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.










