நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை மற்றும் சாதகமான மழைவீழ்ச்சி எதிர்வுகூறல்களைக் கருத்திற்கொண்டு, 2026ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் (NSO) அறிவித்துள்ளது.
ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்காக 4.4 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) ஆரம்பகட்ட மதிப்பாய்வைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்ட கட்டண அதிகரிப்பு 1.46 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இது தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களுக்கும் மின்சாரக் கட்டண அதிகரிப்பைக் கோரப்போவதில்லை என தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நீர்த்தேக்கங்களின் நீர் சேமிப்பு மட்டம் மற்றும் நிலவும் எல் நினோ காலநிலை நிலைமைகளின் கீழ் வழமையை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் என்ற எதிர்வுகூறல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரிப்பதன் மூலம் நீர்மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதுடன், அதிக செலவுடைய அனல் மின் உற்பத்தியின் தேவையையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.










