முதல் பாடலுக்கு தயாரான அஜித்தின் துணிவு

துணிவு படத்திலிருந்து வெளியாகவுள்ள முதல் பாடலுக்கு அஜித் தயாராகியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று லைக்ஸை குவித்து வருகிறது.

அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக துணிவு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் நிறைவு பெற்று டப்பிங் பணிகளும் முடிவுக்கு வந்துள்ளன.

விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு, துணிவு படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தயாராகியுள்ளனர். வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இந்தப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.

முதன் முறையாக இசையமைப்பாளர் ஜிப்ரான் அஜித்துடன் துணிவு படத்தில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே எச். வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் துணிவு படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பாக ரிக்கார்டு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பாடலை ஷூட் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் காட்சிகளை வடிவமைக்கிறார்.

இதுதொடர்பாக கல்யாண் மாஸ்டர் மற்றும் அஜித் இடம்பெறும் புகைப்படம் ஒன்று லைக்ஸை குவித்து வருகிறது. இன்னும் பாடல் காட்சி படமாக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நடன பயிற்சியின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

1987 – இல் பஞ்சாபில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘துணிவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிவு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடர்ச்சியாக தள்ளிக் கொண்டே சென்றதால், துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.