யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம், ஆட்சியாளர்கள் தாங்கள் நினைத்தால் நீதித்துறையை அடக்குவார்கள் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணமாக அமைகிறது என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அலெக்ஸ் ராஜா அவர்கள் திடீரென பதுளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்தப் பின்னணியில் அவர் கையாண்ட வழக்குகளே காரணம் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டியுள்ள நிலையில் வடமாகாண ஆளுநரும் ஒரு அமைச்சர் ஒருவரும் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பத் தகுந்த முறையில் அறிவதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.
இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் தாங்கள் நினைத்தால் நீதித்துறையை அடக்குவோம் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணமாக அமைகிறது.
மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த அரசாங்கங்களை விட மோசமாக நீதித்துறையின் மேல் அடக்குமுறைகளை மேற்கொள்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
முன்னாள் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா பருத்தித்துறை நகர சபை விவகாரம் மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற ஆசிரியர் இட மாற்றங்களை நீதியின் பக்கமாக அணுகியதால் அவர் மீது அரசாங்க தரப்புக்கு அதிர்ச்சி நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதன் பின்னணியில் வட மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் ஒருவரின் அழுத்தத்தின் பெயரில் நீதிபதியின் திடீர் இட மாற்றம் இடம் பெற்றிருப்பதற்கான வலுவான சந்தேகங்கள் எழுகின்றது.
வட மாகாண ஆளுநரை பொறுத்தவரையில் நிர்வாக திறமையற்ற ஊழல்வாதிகளுக்கு துணைபோகும் நபராக காணப்படுகின்ற நிலையில் அவரது செயற்பாட்டால் வடக்கு மாகாண நிர்வாகம் குழம்பிய நிலையில் காணப்படுகிறது.
தனது நிர்வாக திறமை இன்மையை மறைக்கும் முகமாக கல்வி அதிகாரிகள் மீது குறைகளை அள்ளி வீசும் நபராக காணப்படுகிறார்.
வடக்கில் இருந்த ஆளுநர்கள் போராட்டங்கள் இடம்பெறும் போது போராட்டக்காரர்களை அழைத்து பிரச்சினைகளை கேட்டு அறிவது தான் வழக்கம்.
ஆனால் இவர் மட்டும் போராட்டக்காரர்களுடன் பேசுவதற்கு தயார் இல்லை இதை நிர்வாக திறமை இன்மையே இதற்குப் பிரதான காரணம்.
அரசாங்கத்தின் தவறுகளை நீதித்துறை சுட்டிக்காட்ட முற்படும்போது அதற்கு எதிராக நீதித்துறையை அடக்க முனைவது ஜனநாயகத்தை குழி தண்டி புதைக்கும் செயலாகும்.
ஆகவே சட்டத்தின் பாதுகாவலராக செயற்படும் நீதிபதிகள் இவர்களின் செயற்பாடுகளை ஏண்ணி மனம் தளராது நீதியை தொடர்ந்து நிலை நாட்டுவார்கள் என நம்புகிறோம், என அவர் தெரிவித்தார்.