மட்டக்களப்பு மாவட்டத்தில், தனது 24 வயது மகளை தொடர்ச்சியாக தகாத மற்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டி துன்புறுத்தி வந்த 60 வயதுடைய தந்தையாரை, நேற்று திங்கட்கிழமை இரவு, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவரை, அவரது தந்தை தொடர்ச்சியாக ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் குடும்பத் தகராறுகளின் போது, தந்தை இவ்வாறு தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட யுவதி இது குறித்து பொலிஸ் மா அதிபருக்கு (IGP) இணையத்தளம் (Online) ஊடாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் பெறப்பட்ட இந்த முறைப்பாடு, உடனடியாக சம்பந்தப்பட்ட பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இதற்கமைய செயற்பட்ட பிரதேச பொலிஸார், சம்பவ தினமான நேற்று இரவு, மதுபானசாலை ஒன்றில் கடமையாற்றி வந்த சந்தேகநபரான 60 வயதுடைய தந்தையை, பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குறித்த பிரதேச பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.