வைத்தியசாலை ஊழியர்கள் செய்த மோசமான செயல் : பரிதாபமாக பறிபோன உயிர்!

-வவுனியா நிருபர்-

வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் வைத்தியசாலையின் அசமந்த போக்கினால் நேற்று புதன்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார்

செட்டிகுளம் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான திருநாவுக்கரசு ஆனந்தராசா (வயது 60) என்பவர், கடந்த 23 ஆம் திகதி நெஞ்சுவலி காரணமாக செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வவுனியா பொது வைத்தியசாலையினர், நோயாளியை உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அறிவித்திருந்ததாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

இதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்

நோயாளர் காவு வண்டி புறப்பட்டு ஏறக்குறைய 15 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில், மேலதிகமாக மேலும் ஒருவரை ஏற்றிச்செல்ல இருப்பதாக கூறி குறித்த நோயாளர் காவு வண்டியை மீண்டும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு திரும்ப அழைத்துள்ளனர் வைத்தியசாலை நிர்வாகத்தினர்

இந்நிலையில், மீள வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர் காவு வண்டியில் இருந்த நோயாளி திருநாவுக்கரசு ஆனந்தராசா என்பவர் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையிலே உயிரிழந்துள்ளார்

நோயாளிக்கு மேலதிக சிகிச்சை வழங்க தாமதமானதாலேயே உயிரிழந்துள்ளார் என உறவினர்களும் அப்பிரதேச மக்களும் வைத்தியசாலை மீது குற்றம் சாட்டுகின்றனர்

மேலும் இறந்தவரின் உடல் இன்று வியாழக்கிழமை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு, மரணவிசாரணை அதிகாரி கருணாநிதி ஹரிபிரசாத்தின் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

இச்சம்பவத்தால் செட்டிகுளம் வைத்தியசாலை பகுதி சற்று பதற்ற நிலையில் காணப்படுவதுடன், இறந்தவரின் உறவினர்கள் கிராம மக்கள் வைத்தியசாலைக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றையும் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்