-யாழ் நிருபர்-
சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபரை, படுகொலை செய்து நகைகள் பணம் என்பவற்றை கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த, வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீண்ட காலமாக சுவிட்சர்லாந்து நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக, விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவரிடமிருந்து எவ்வித அழைப்பும் தங்களுக்கு வரவில்லை என்றும் தங்களால் அவரை தொடர்பு கொள்ள முடிவில்லை என்றும் அவரது குடும்பத்தினரால் யாழில் உள்ள உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டு இது தொடர்பில் கடந்த சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற போது தூர்நாற்றம் வீசியது, உடனே பொலிஸார் வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்த போது, குறித்த நபர் உடலில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்கள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில், கமரா சேதமாக்க முன்னரான பதிவுகளின் அடிப்படையில் 14ஆம் திகதி இரவு வேளை முகமூடி அணிந்த இருவர் சமையலறை வழியாக உள்நுழைந்தமை, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் புகுந்தவர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய பின்னர், அவரை படுகொலை செய்து, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளமை, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனையின் போது, உடலில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டமைக்கான அடையாளங்களும் காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.