நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி யாழ்ப்பாண மாவட்டத்தின் அச்சுவேலிப் பகுதியில் பதிவாகியுள்ளது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் 90.8 மில்லி மீற்றர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் உள்ள சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நிலவி வரும் மழை காரணமாக 20 பெரிய நீர்த்தேக்கங்களும் 19 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் இன்னும் நிரம்பி வழிகின்றன என்று நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 13 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு எச்சரிக்கை இன்னும் அமலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.