-அலுவலக நிருபர்-
மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் உள்ள வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கல்லடி புதிய டச்பார் வீதியை சேர்ந்த சந்திரசேகரன் கஜேந்திரன் (வயது-44) எனத் தெரியவந்துள்ளது.
குறித்த வாவியில் சம்பவ தினமான இன்று காலை 6.30 மணியளவில் வழமைபோல மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கியதையடுத்து அதனை மீனவர் கரைக்கு இழுத்து வந்து பொலிசாருக்கு தெரியப்படுத்தினார்.
குறித்த நபர் வாவியில் நீராடிய நிலையில் நீரிழ் மூழ்கியுள்ளார் என, பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.