தேசிய நோய் எதிர்ப்புத் திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாடுகள் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள ‘உலக நோய் எதிர்ப்பு வாரத்தை’ முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தொற்றுநோயியல் பிரிவின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் மருத்தவர் பாலித கருணாபேம இதனைத் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு முறையாக தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இது குழந்தை இறப்பு வீதத்தை குறைக்கவும், மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் நேரடி காரணமாக அமைந்துள்ளது.
1978 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தேசிய நோய் எதிர்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது தடுப்பூசி வழங்கலில் இலங்கை உலகளவில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் ஊடாக இலங்கையிலிருந்து போலியோ, மேகவெட்டை, ருபெல்லா போன்ற நோய்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளன.
“உலக நோய் எதிர்ப்பு வாரம் ஏப்ரல் 24 முதல் 30 வரை கொண்டாடப்படுகிறது. தடுப்பூசிகள் மூலம் எமது நாட்டு சிறுவர்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதுடன், ஏனைய பல நோய்களையும் தடுத்துக்கொள்ள எமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் பயனாகவே கடந்த 15 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது,” என மருத்துவர் பாலித கருணாபேம மேலும் குறிப்பிட்டார்.