புனித வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட மத வழிபாடுகளும், கலாசார நிகழ்வுகளும் மிகவும் சிறப்பான முறையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
வெசாக் வாரத்தை முன்னிட்டு பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நல நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மங்கலாராமய விகாரையில் விசேட மத வழிபாடுகளும் ஆன்மீக ஆசீர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
விகாராதிபதி வணக்கத்திற்குரிய அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்நிலைவுகளில், பெருமளவான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களையும் பார்வையிட்டனர்.
மேலும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரம்மாண்டமான வெசாக் அலங்காரக் கூடுகள் அமைக்கப்பட்டிருந்தன. வண்ணமயமான மின்விளக்கு அலங்காரங்களுடன் மிளிர்ந்தன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.எம்.யூ.பிரதீப் களுப்பான, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன மற்றும் சர்வமத தலைவர்கள் ஆகியோர் இணைந்து அலங்காரக் கூடுகளைத் திறந்து வைத்தனர்.
இம்முறை வெசாக் வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் தாகசாந்தி (பானங்கள் வழங்குதல்) உள்ளிட்ட பல சமூகநல நிகழ்வுகள் சர்வமத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


