‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் சஞ்சீவ் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி

பாலசந்தர் இயக்கத்தில் கமல், சுமித்ரா, ஷோபா, சரத்பாபு நடித்த நிழல் நிஜமாகிறது இப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படம். கமல், சுமித்ரா மோதிக் கொள்ளும் காட்சிகள் சூடான கவிதை போலிருக்கும். கண்ணதாசன் வரிகளில் அமைந்த, கம்பன் ஏமாந்தான் தெவிட்டாத பா அமுது.

இந்தப் படம் மலையாளத்தில் வெளியான அடிமகள் திரைப்படத்தின் தமிழ் தழுவல். முறைப்படி அனுமதி வாங்கி பாலசந்தர் தமிழில் ரீமேக் செய்தார். அதற்கு ஒரு வருடம் முன் தெலுங்கில் அடிமகள் ரீமேக் செய்யப்பட்டது. அதில் கமல் நடித்த சஞ்சீவ் வேடத்தில் ரஜினி நடித்திருந்தார்.

மலையாளத்தின் பிரபல எழுத்தாளர் பம்மன் எழுதிய கதையைத் தழுவி அடிமகள் எடுக்கப்பட்டது. தோப்பில் பாஸி திரைக்கதை எழுதினார். இயக்கம் கே.எஸ்.சேதுமாதவன். அன்றைய மலையாள சூப்பர் ஸ்டார் சத்யன் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷீலா நடித்தார். வேலைக்கார பெண்ணாக சாரதாவும், அவரை திருமணம் செய்யும் பொட்டனாக பிரேம் நஸீரும் நடித்தனர். படம் ஹிட்டானதுடன் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதையும் வென்றது.

1969 இல் வெளியான அடிமகள் திரைப்படத்தை 1977 இல் தெலுங்கில் ரீமேக் செய்தனர். அச்சு அசலாக எந்த மாற்றமும் இன்றி ரீமேக் செய்யப்பட்டது. சத்யன் நடித்த நாயகன் வேடத்தில் ரஜினியும், நாயகியாக சங்கீதாவும், வேலைக்காரியாக ஸ்ரீப்ரியாவும் நடித்தனர். சத்யன் அடிமகள் படத்தில் சதா சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார்.

பேருந்தில் இருந்து இறங்கும் முதல் காட்சியிலிருந்து அவரது கைகளில் சிகரெட் இருந்து கொண்டிருக்கும்.
தெலுங்குப் படத்தில் ரஜினி பேருந்தில் இருந்து இறங்கி பழக்கூடைய விட்டெறிந்த நபரை கன்னத்தில் அறைந்துவிட்டு ஸ்டைலாக சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிப்பார். படம் முழுக்க அவரது ஸ்டைல் நிறைந்திருக்கும்.

இதற்கு அடுத்த வருடம் 1978 இல் அடிமகளை தமிழில் பாலசந்தர் ரீமேக் செய்தார். நாயகனாக கமலும், நாயகியாக சுமித்ராவும், வேலைக்காரியாக ஷோபாவும் நடித்தனர்.

அடிமகள் படத்திலிருந்து இதில் சில மாறுதல்களை பாலசந்தர் செய்திருந்தார். ஆரம்பத்தில் ஷோபாவை ராணியாக சித்தரித்து ஒரு கனவுக்காட்சியை வைத்து, அவரது விருப்பத்தை நாடகீகமாக உணர்த்தியிருப்பார். அதேபோல் சுமித்ரா பரதநாட்டியம் சொல்லிக் கொடுப்பவர்.

அந்த இடத்தில் ஷுவுடன் வந்ததற்காக கமலை அவர் கடிந்து கொள்வார். ஒருநாள் அவர் இல்லாத நேரம் கமல் சட்டையை கழற்றிவிட்டு பரதநாட்டியம் ஆடுவார். திடீரென வரும் சுமித்ரா கமலின் திறமையைப் பார்ப்பார். அதன் பிறகு அவரது மனம் கமலை நோக்கி சாயத் தொடங்கும்.

அடிமகள் படத்தில் இந்தக் காட்சி இல்லை. அதனால் தெலுங்குப் படத்திலும் அதனை வைக்கவில்லை. கமல் நல்ல டான்சர் என்பதால் பாலசந்தர் இதனை படத்தில் புதிதாக சேர்த்துக் கொண்டார். அது கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் அமைந்தது.

1977 இல் தெலுங்கில் சிலகாம செப்பண்டி (கிளி சொன்னது) என்ற பெயரில் வெளியான படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றதுடன், சிறந்த திரைப்படத்துக்கான ஆந்திர அரசின் நந்தி விருதையும் வென்றது. அதற்கு அடுத்த வருடம் 1978 இல் வெளியான நிழல் நிஜமாகிறது படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ரஜினியா, கமலா யாருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது என்று கேட்டால் ஒரிஜினலில் நடித்த சத்யனின் நடிப்புதான் இயல்பாகவும், சிறப்பாகவும் இருந்தது எனலாம். அனாயாசமாக அந்த கதாபாத்திரத்தை சத்யன் கையாண்டிருப்பார்.

அவருக்குப் பிறகுதான் கமல், ரஜினியை சொல்ல முடியும். பாலசந்தர் தனது நகாசு வேலைகளால் அது தன்னுடைய படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பார்.

மூன்று படங்களையும் பார்ப்பது மூன்று முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளின் திறமையை ஒப்பிட்டுக் கொள்ளவும் வேறுபடுத்தி அறியவும் உதவும்.