சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் “நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலில்” நடைபெற்றதுடன், “ஊக்கமளிக்கும் வகையில் முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக மத்தியஸ்த நாடுகளான கத்தார் மற்றும் பாகிஸ்தான் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
அறிக்கையின்படி,
1.பேச்சுவார்த்தைக்கு அரசியல் மேற்பார்வை வழங்குவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் உயர் மட்டக் குழுவை (High Level Committee) அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
2.தலைமை பேச்சுவார்த்தையாளர்கள் இந்தக் குழுவிற்கு முறையாக அறிக்கை சமர்ப்பிப்பதுடன், அணுசக்தி, பொருளாதாரத் தடைகள் மற்றும் ஒப்பந்த அமுலாக்க கண்காணிப்பு மற்றும் சர்ச்சைத் தீர்வு உள்ளிட்ட பிரிவுகளுக்கான பணிக்குழுக்களை வழிநடத்துவார்கள்.
3.இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான 60 நாள் செயல் திட்டத்திற்கு ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன.
4.அனைத்து விவகாரங்களையும் உள்ளடக்கிய தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் சுவிட்சர்லாந்தில் தொடரும்.
5.ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில், தவறான புரிதல்கள் மற்றும் சம்பவங்களைத் தவிர்க்க உரிய தரப்புகளுக்கிடையே நேரடி தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
6.லெபனானில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கில், கத்தார் மற்றும் பாகிஸ்தான் வசதியுடன் செயல்படும் “de-confliction cell” என்ற ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கவும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்புக்கிடையேயான மோதல்கள் தொடர்வது, பேச்சுவார்த்தையின் முக்கிய சவால்களில் ஒன்றாகவே இருப்பதாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான கருத்துக்களால் பேச்சுவார்த்தை தடைபட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தபோதிலும், தற்போது மத்தியஸ்த நாடுகள் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.