2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்றும், பரீட்சையை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்ற பல தரப்பினரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் வழிகாட்டல்களின்படி, உயர்தரப் பாடத்திட்டத்தை முழுமையாக கற்பிக்க 300 பாடசாலை நாட்கள் அவசியம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 2026 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 2026 ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை மொத்தம் 343 பாடசாலை நாட்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு, கடந்த பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து வரவிருக்கும் பரீட்சை வரை 4 மாதங்களும் 10 நாட்களும் இடைவெளி கிடைத்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, பரீட்சைக்குத் தயாராக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், நிர்ணயிக்கப்பட்ட பரீட்சைக் கால அட்டவணையை மாற்றவோ ஒத்திவைக்கவோ தேவையில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
