அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈரான் தேசிய அணி நிச்சயமாகப் பங்கேற்கும் என, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், விளையாட்டையும் அரசியலையும் ஒன்றுடன் ஒன்று கலக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
“போட்டி ஆரம்பமாகும் போது பிராந்தியத்தில் அமைதியான சூழல் நிலவும் என நாம் எதிர்பார்க்கிறோம். அது விளையாட்டுக்கு ஒரு பெரிய பலமாகும். எப்படியிருந்தாலும் ஈரான் இத்தொடரில் பங்கேற்க வேண்டும்”, என அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய பாதுகாப்புச் சூழலில் ஈரான் அணி பங்கேற்பது உகந்ததல்ல எனவும், அது வீரர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் எனவும் எச்சரித்திருந்தார்.
அதேவேளை, ஈரானிய உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தமது நாடு இத்தொடரில் பங்கேற்காது என ஈரானிய விளையாட்டுத்துறை அமைச்சர் கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.
தமது போட்டிகளை அமெரிக்காவிற்குப் பதிலாக மெக்சிகோவில் நடத்துமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை பிஃபா (FIFA) நிர்வாகம் நிராகரித்துள்ளது.
தற்போதைய அட்டவணையின்படி, ஈரான் அணி தனது ஆரம்பச் சுற்றுப் போட்டிகளை அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டல் ஆகிய நகரங்களில் விளையாடவுள்ளது.
கால்பந்து மைதானத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்டகாலப் போட்டி நிலவுகிறது.
1998: அமெரிக்காவைத் தோற்கடித்து ஈரான் தனது முதல் உலகக் கிண்ண வெற்றியைப் பதிவு செய்தது.
2022: கத்தாரில் நடைபெற்ற தொடரில் அமெரிக்கா ஈரானைத் தோற்கடித்தது.
தற்போதைய போர் பதற்றங்களுக்கு மத்தியில், விளையாட்டின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்க முடியும் என கால்பந்து ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.