-மூதூர் நிருபர்-
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருகோணமலை வலயத்திற்குட்பட்ட கிண்ணியா அல் மீனா வித்யாலயம் ஏற்பாடு செய்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் வீதி நாடகமும் இன்று வெள்ளிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.வை.ஹதியத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ‘போதையின் உச்சம் தற்காலிகம், சேதம் நிரந்தரம்’எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழிப்புணர்வு பேரணியானது பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பயணித்து, மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தின் போது, போதைப்பொருள் பாவனையின் ஆபத்துக்கள் மற்றும் சமூகச் சீரழிவுகளை விளக்கும் வகையில் மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.
தொடர்ந்து, இன்றைய இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதால் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் ஏற்படும் விபரீதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் மன உளைச்சல்களைத் தத்ரூபமாக விவரிக்கும் விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றும் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது.
பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்த இந்நாடகம், போதைக்கு எதிரான வலுவான செய்தியைச் சமூகத்திற்கு வழங்கியது.
இந்நிகழ்வின் இறுதிக்கட்டமாக, போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இப்போராட்டத்தில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான கிண்ணியாவை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.