தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு, வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வேர்ல்ட் விஷன் நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாட்டு செய்த விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும் நேற்று வியாழக்கிழமை வாகரையில் நடைபெற்றது.
‘போசாக்கு மிக்க உணவே நலம் தரும்’ என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியானது, வாகரை பொலீஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு வாகரை திருமலை வீதி வழியாக ஊர்வலமாக நடந்து வந்து வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை சென்றடைந்தது.
இதன்போது நடைபவனியில் கலந்து கொண்டோர் போசாக்கு உணவு தொடர்பான விழிப்பூட்டல் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியிருந்தார்கள்.
நடைபவனியை தொடர்ந்து அதிதிகளால் போசாக்கு மாதம் தொடர்பான விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
தாய்மாருக்கு ஆரோக்கியமான உணவு வழங்கி வைக்கப்பட்டதுடன், சத்துணவுக் கண்காட்சி இடம்பெற்றது.
இதில் பிரதேச அன்னையர் ஆதரவு குழுவினரால் தயாரிக்கப்பட்ட சத்துணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தேன், கிழங்கு வகைகள், பாலப்பழம், வீரப்பழம், கீரைகள் போன்ற, வாகரை பிரதேசத்தில் காணப்படுகின்ற பல்வேறு உணவு வகைகளை மையப்படுத்தியதாக இவ் சத்துணவு கண்காட்சி அமைந்திருந்தது.
நிகழ்வில், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எச்.எம்.ரி.சசிந்த, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.சோதிராஜ், கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன், வேர்ல்ட் விஷன் முகாமையாளர் எ.ரவீந்திரன், வாகரை பிரதேச பாடசாலை அதிபர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.