டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சிவலக்ஸன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் பங்கேற்புடன் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்திவெளி பிரதேசத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதனை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தி, வீடுகள், வர்த்தக நிலையங்கள், வெற்றுக் காணிகள், வடிகால்கள் உள்ளிட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், நீர் தேங்கியுள்ள பாத்திரங்கள் மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய பொருட்கள் அகற்றப்பட்டன.
இவ் நடவடிக்கையின் போது 20 நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் சிவப்பு எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன.
கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 66 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 55 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், பிரதேச சபை உப தவிசாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், கோறளைப்பற்று 22 தொப்பிகலை படைப்பிரிவின் கப்டன் திலகரத்ன, இராணுவத்தினர், சுகாதார பரிசோதகர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள், பொலிசார் கலந்து கொண்டனர்.