சவுதி அரேபியாவில் பேஸ்புக் பதிவொன்றுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய பொது வழக்குத் தொடரும் திணைக்களம் 2026 நவம்பர் 9ஆம் திகதி இவ்வழக்கில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அனோஜனுக்கு எதிரான எஞ்சிய சட்ட நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ளன.
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றம், சவுதி அதிகாரிகளால் அவமதிப்புக்குரியதாகக் கருதப்பட்ட பேஸ்புக் பதிவொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2026 செப்டம்பர் 17ஆம் திகதி அனோஜனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
இராஜதந்திர மற்றும் ஏனைய தலையீடுகளின் பின்னர், 2026 ஒக்டோபர் 14ஆம் திகதி சவுதி நீதிமன்றம் அவரது மரண தண்டனையை இரத்துச் செய்தது. இருப்பினும், ஏனைய தண்டனைகள் தொடர்ந்தும் அமுலில் இருந்ததால், அவரை முழுமையாக விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், சவுதி அரேபிய பொது வழக்குத் தொடரும் திணைக்களத்தின் தற்போதைய தீர்மானம், அனோஜனுக்கு எதிரான எஞ்சிய சட்ட நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் அவர் இலங்கைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனோஜனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், அனோஜனின் குடும்ப உறுப்பினர்கள் இன்று வெளிவிவகார அமைச்சுக்கு விஜயம் செய்து, அவரது விடுதலையை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்கள், அதிகாரிகளுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டல், வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர தலையீடுகள் மற்றும் ஏனைய அதிகாரிகளின் முயற்சிகள் காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபிய அரசாங்கம், அந்நாட்டு நீதித்துறை, சவுதி மற்றும் இலங்கை இராஜதந்திர அதிகாரிகள், அத்துடன் வழக்கில் உதவுவதற்காக சவுதி அரேபியாவுக்குச் சென்ற சட்டத்தரணிகள் குழுவினருக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.










