-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் உகன பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பகுதியில் காட்டுக்குள், மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர், காட்டு யானை தாக்கிப் பரிதாபமாக உயிரிடைந்துள்ளார்.
மகாகண்டிய கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலகே உபசேன ரத்நாயக்க (வயது 44) என்பவரே இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.
இவர் தினமும் தனது பசுக்களை அப்பகுதியிலுள்ள வனக்காப்புப் பகுதிக்குள் ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு, மாலையில் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழமையாகும். நேற்று செவ்வாய்க்கிழமை மாலையும் பசுக்களுடன் வனப்பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளை, திடீரென எதிர்ப்பட்ட காட்டு யானை அவரைத் தீவிரமாகத் தாக்கியுள்ளது.
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இவர், உடனடியாக மீட்கப்பட்டு அம்பாறை பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.










